விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது வி.எஸ்.கே.நகர். இங்கு வசிப்பவர் சரவணன், இவரது மகன் விஷால் டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கும் விழுப்புரம் கம்பன் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜிலு என்பவரது மகன் மிதுன்(20) என்பவருக்கும் இடையே செல்போன், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பிறகு நண்பர்களாக மாறினார்கள். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம் நெருக்கமாய் மாரியதும் அவ்வப்போது மிதுனை சந்திப்பதற்காக விஷால் அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அங்கு பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மிதுனின் தங்கையுடன் விஷாலுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மிதுன் விஷாலை கண்டித்துள்ளார்.
‘நண்பனாக எண்ணி என்னோடு என் வீட்டுக்கு வந்து செல்லும் அளவிற்கு உனக்கு உரிமை அளித்தேன், ஆனால் எனக்கு துரோகம் செய்யும் அளவில் விவரம் அறியாத என் தங்கைக்கு காதல் வலை விரிக்கலாமா? இது நண்பனுக்கு துரோகம் செய்வது போல் இல்லையா? என்று கண்டித்துள்ளார்’. ஆனால் அதன் பிறகும் விஷால் மிதுன் தங்கையுடன் பேசி பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் கோபமுற்ற மிதுன் நேற்று முன்தினம் ஒரு காரில் திருவெண்ணைநல்லூர் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே விஷாலுக்கு போன் செய்து நான் திருவெண்ணெய்நல்லூர் வந்துள்ளேன் உன்னை பார்க்கவேண்டும் என்று கூறி அவரை வரவழைத்துள்ளார். மிதுன் இருந்த இடத்திற்கு அவரை சந்திக்க விஷால் சென்றுள்ளார். அங்கே திருவெண்ணைநல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் விழுப்புரம் கீழ் பெரும்பாக்கத்தை சேர்ந்த பக்கிரிமகன் கணேஷ் மேலும் நான்கு நண்பர்களுடன் அங்கு காத்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து விஷாலை காரில் கடத்தி சென்றுள்ளனர். திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே மறைவான இடத்தில் காரை நிறுத்தி விஷாலை காரிலிருந்து இறங்கி மிதுன் உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விஷாலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் விஷால் படுகாயமடைந்து அவர்களிடமிருந்து இருந்து தப்பி சென்று தனது நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக விஷாலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் இது தொடர்பாக விஷால் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் மிதுன் உட்பட அவரது நண்பர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் மூவரை கைது செய்துள்ளனர். மிதுனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.