கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார். ஜெ.வின் மரணம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “ஜெயலலிதா எங்களுக்கு தெய்வம்; கடவுள். ஆகையால், ஆணையத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறமானவை. ஒரு தலைபட்சமானது; எனவே அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை பொறுத்தவரையில், ஜெயலலிதாவை இழந்து தவிக்கின்ற இந்த நேரத்தில் இவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கின்றன. இருந்தாலும், பொதுவாழ்வில் இருக்கின்ற நாங்கள், சட்ட ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து, சட்டபடி நேர்மையாகவும், தூய்மையோடும் எதிர்கொள்வேன். மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.