மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில் தீபா மற்றும் தீபக் ஆகியோரை, ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் எனக் குறிப்பிடப்பட்டதை, 'நேரடி வாரிசு' என நீதிபதிகள் திருத்தம் செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கக்கோரி அ.தி.மு.க. நிர்வாகிகள் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது.
மேலும், ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை அமைத்து பொதுச்சேவை செய்ய வேண்டும், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று (29/05/2020) தங்கள் உத்தரவில் திருத்தம் செய்த நீதிபதிகள், தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் "இரண்டாம் நிலை வாரிசுகள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை "நேரடி வாரிசு" என மாற்றியுள்ளனர்.
மேலும், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு தீபா மற்றும் தீபக் ஆகியோர் செல்ல வேண்டாம் எனவும் இருவருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.