ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா, ரோகு, மிருகால், திலோபி மற்றும் கரிமீன் உள்ளிட்ட மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் 20 லட்சம் மீன்குஞ்கள் விடப்பட்டுள்ளன.
அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் அணை முழுவதும் நீர் பரந்து விரிந்துள்ளது. சித்தன்குட்டை, பவானிசாகர், தெங்குமராஹாடா போன்ற வனப்பகுதி வரை நீர்பரப்பு தேங்கியுள்ளது. நீர்த்தேக்கத்தின் பரப்பு அதிகமாக உள்ளதால் மீனவர்கள் மூலம் பிடிக்கப்படும் மீன்களின் வரத்து சராசரியாக 3 டன்னில் இருந்து தற்போது அரை டன்னாக அதாவது 500 கிலோவுக்கு குறைந்துவிட்டது.
அணையில் பிடிக்கப்படும் மீன்கள் மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளி மார்கெட்டை விட குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த அணை மீன்கள் சுவையானதாக இருப்பதால் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு, புளியம்பட்டி, திருப்பூர் பகுதியில் இருந்து மீன்வாங்க மக்கள் கூட்டம் தினமும் வரும். தற்போது மீன்வரத்து குறைந்ததால், ஒரு நபருக்கு தலா 2 கிலோ மட்டுமே மீன் வழங்கப்படுகிறது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் இரண்டு கிலோ மீன் மட்டுமே வாங்கிச் செல்கிறார்கள்.