
சென்னை மாநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரங்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் இருக்கக்கூடிய பகுதியில் பணியாளர் பெண்கள் சிலர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வழக்கம்போல் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஐடி பணியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அஸ்வின் என்ற நபர் தூக்கக் கலக்கத்தில் சிவகாமி என்ற பெண் துப்புரவுப் பணியாளர் மீது மோதி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவகாமி உயிரிழந்தார்.
அப்போது அவருடன் பணியாற்றிய சக பணியாளர் பெண்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியாளர் சிவகாமிக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து மற்றும் ரூ.5 இலட்சம் நிதியுதவி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருவான்மியூர் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் சிவகாமி குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள மறைந்த சிவகாமி இல்லத்திற்கு நேரில் சென்று ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.