பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அண்ணாநகர் 13-வது தெருவில் வசித்து வருபவர் முகமது ஜாகீர். 52 வயதாகும் இவருக்கு மனைவியும், 22 வயதில் அப்துல் ரகுமான் என்ற மகனும் உள்ளார். மளிகை கடை நடத்தி வரும் முகமது ஜாகீர், அடிக்கடி கடையை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிடுவார்.
ஏன் அடிக்கடி கடையை பூட்டுகிறார் என்று மனைவி சந்தேகப்பட்டுள்ளார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் முகமது ஜாகீர் மனைவியிடம், உங்கள் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி வெளியூர் செல்கிறார். கடையை சரியாக திறப்பதில்லை என்று சொல்லியுள்ளனர்.
இதனை கேட்டதும், முகமது ஜாகீர் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினார் முகமது ஜாகீர். ஈரோட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தனது மகன் அப்துல் ரகுமானிடம் தனது கணவரின் செயலை சொல்லியுள்ளார். தனது தாயை ஈரோட்டுக்கு வர சொல்லிய ரகுமான், தஞ்சைக்கு சென்றார்.
தஞ்சைக்கு வந்த அப்துல் ரகுமான், பல பெண்களுடன் பழக்கம் வைத்துள்ளதை கண்டித்து தந்தை முகமது ஜாகீரை சத்தம் போட்டார். மேலும் தாயுடன் சேர்ந்து வாழும்படியும் கூறினார். இதுதொடர்பாக தந்தை- மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதேபோல் சம்பவத்தன்று தகராறு நடந்தது. பிறகு அப்துல் ரகுமான் வீட்டில் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில் அதிகாலை எழுந்த முகமது ஜாகீர், தூங்கி கொண்டிருந்த மகன் அப்துல் ரகுமானை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்தார்.
உடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி அப்துல் ரகுமான் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைநத அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முகமது ஜாகீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து முகமது ஜாகீர் வீட்டை திறந்து பார்த்தபோது அப்துல் ரகுமான் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகுமானின் உடலை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் முகமது ஜாகீரை போலீசார் தேடி வருகிறார்கள்.