வட்டார நடை எழுத்துக்கு இலக்கியத் தகுதியை ஏற்படுத்திய கி. ராஜநாரயணன் என்னும் கிரா, நேற்று (17.05.2021) இரவு மறைவெய்தினார். இது இலக்கிய ஆர்வலர்களையும், படைப்பாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இலக்கிய உலகில் இடையறாது இயங்கிய கி.ரா, அண்மைக்காலமாக முதுமை நோய்க்கான மருத்துவத்தில் இருந்தார். கடந்த ஆண்டு தனது அன்பு மனைவி கணவதி அம்மாவை இழந்த கி.ரா, தனது 98ஆம் வயதில், தனது வாழ்க்கைக் கதையை முடித்துக்கொண்டார்.
கி.ரா., 1923 செப்டம்பர் 16இல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். கி.ரா.வின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும். தனது பெரைப் போலவே நீண்ட புகழைப்பெற்றவர். கி.ரா. வைணவ குடும்பத்தில், ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் ஆகியோரின் புதல்வராகப் பிறந்த கி.ரா, ஏராளமான எழுத்தாளர்களை ஊக்கமூட்டி வளர்த்திருக்கிறார்.
கி. ராஜநாராயணன் விவசாயியாக வாழ்வைத் தொடங்கியவர். பள்ளிக்கூடப் படிப்போடு, கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட அவர், தனது முயற்சியாலும் பயிற்சியாலும் தன்னை ஒரு தேர்ந்த கதை சொல்லியாக வளர்த்துக்கொண்டார். தனது மண்ணின் மணத்தை அப்பட்டமான எழுத்தாக்கிய எழுத்தாளர் அவர். கரிசல் மக்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் பழக்க வழக்கங்களையும், வெள்ளந்தியான உரையாடல்களையும், முழுமையாகத் தனது எழுத்துக்களையே கண்ணாடியாக்கிக் கொண்டு, எதிரொளித்து வந்தார் கி.ரா. அது இலக்கிய உலகையே அசைக்கத் தொடங்கியது.
அவரது நாவல்களான ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’, ‘அந்தமான் நாயக்கர்’ ஆகியவையும், அவரது குறுநாவல்களான ‘கிடை’, ‘பிஞ்சுகள்’ உள்ளிட்டவையும் தமிழ் இலக்கியத்தின் மகுடங்களாகத் திகழ்கின்றன. அவரது சிறுகதை நூல்களான ‘கதவு’, ‘பேதை’, ‘பாரத மாதா’, ‘கண்ணீர்’, ‘வேட்டி’, ‘கரிசல் கதைகள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘குழந்தைப் பருவக் கதைகள்’, ‘கொத்தை பருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘பெண் கதைகள்’, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ உள்ளிட்டவை பெருத்த வரவேற்பைப் பெற்றன.
கி.ரா.வின், ‘மாமலை ஜீவா’, ‘இசை மகா சமுத்திரம்’, ‘அழிந்து போன நந்தவனங்கள்’, ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ உள்ளிட்ட கட்டுரை நூல்களும் இலகிய உலகில் தனித் தடம் பதித்தன. அவரது ‘கோபல்லபுரத்து மக்கள்’ நூல், சாகித்திய அகாடமி விருதுபெற்றது குறிப்பிடத்தக்கது. கரிசல் வட்டார அகராதியையும் உருவாக்கியவர் கி.ரா.
இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின், தமிழ் இலக்கியச் சாதனை விருது, என பல்வேறு விருதுகளையும் கி.ரா.பெற்றிருக்கிறார். பள்ளிப் படிப்பில் சோபிக்காத கி.ரா., புதுவை பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது இழப்பின் துயரை எழுதிகொண்டே இருக்கிறது இலக்கிய உலகம். அதிலிருந்து...
எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம்:
ஒரு எழுத்து யுகம் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. இனி யுகத்தின் நாட்கள் தொடரும்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன்:
கி.ரா மறைந்தார். தமிழ், நோபல் பரிசுக்கு தகுதியான ஒரே எழுத்தாளனை இழந்துவிட்டது.
கவிஞர் சக்திஜோதி:
கரிசல் மொழிக்கு மட்டுமல்ல, தமிழ் மொழிக்கும் தனித்த அடையாளம் மதிப்பிற்குரிய எழுத்தாளர் கி.ராஜ நாராயணன்.
கவிஞர் உமா மோகன்:
நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருந்த நம்மைவிட்டு அம்மாவைக் காணச் சென்றுவிட்டார் நைனா!
புதுவைக்கவிஞர் மு.பாலசுப்பிரமணியம்:
எத்தனை சந்திப்புகள் எத்தனை உரையாடல்கள் ஒவ்வொரு முறையும் எத்தனை கதைகள், சம்பவங்கள் என சந்திக்கும்போதெல்லாம் சிறு குழந்தையைப் போல வாரி வழங்கும் கரிசல் நாயகன் கி.ரா காலத்தில் கரைந்துவிட்டார்.
கவிஞர் சிங்கார சுகுமாரன்:
போற்றுதலுக்குரிய கி. ராஜநாராயணன் கரிசல்காட்டின் மண்ணின் மைந்தர். சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
இது வேறு ஒருவருக்கு வேறு யாரோ சொன்ன சொற்றொடர்தான். ஆனாலுங் கூட கி.ரா. அய்யாவுக்கும் இந்த சொற்கள் பொருத்தமானதே. தனது மண் மணக்கும் சொற்களால் மனிதர்களைக் கண்ணெதிரே உலவவிடுகிற மாயாஜாலம் அவர் எழுத்தில் இருக்கிறது. இன்னும் ஓராண்டு இருந்திருந்தால் நூற்றாண்டில் தடம் பதித்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு காலம் அவரை தனக்குக் கதை சொல்ல அழைத்துக்கொண்டது. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் மட்டும் அவர் பெயர் கூறும். மனம் கனக்கிறது. மரணத்தை எதிர்த்து நாமென்ன செய்துவிடமுடியும்? கண்ணீரோடு அஞ்சலி செய்கிறேன்.