
இந்தியாவில் நேற்று (14.04.2021) ஒரேநாளில் 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,038 பேர் கரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் நேற்று 93,528 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்திலும் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. அதேபோல் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளைத் தொடர்ந்து கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் போலி சானிடைசர் தயாரித்து விற்றதாக 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.