“தாய் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும். எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற எல்லைக் காவலர்களுக்கு 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, “1967 ஜூலை 18 அன்று சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணா, சட்டமன்றத்தில் அறிவித்தார். அந்த நாளை தமிழ்நாடு நாளாக அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் சிந்தித்து அந்த நாளை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.