வேலை கிடைக்கவில்லை எனக் கூறி போலி மருத்துவராக மாறிய ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செம்பியன். இவர் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றியவர். தொடர்ந்து ரஷ்யாவில் மருத்துவ மேற்படிப்பை முடித்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலிலும் பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்த சூழலில் தமிழகத்தில் குடியேறலாம் என முடிவு செய்து மெடிக்கல் கவுன்சில் இணையத்தில் தனது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முயன்றபோது சான்றிதழ்களை இணையம் ஏற்றுக்கொள்ளாததால் மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அதில் இவரது பெயரில் வேறு ஒருவரது புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களும் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து மருத்துவர் செம்பியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏரோநாட்டிக்கல் இஞ்சினியர் ஒருவர் இந்த மோசடி செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் அவரும் செம்பியன் என்ற பெயருடையவர் என்பது தெரிய வந்தது. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததால் ஜஸ்ட் டயல் மற்றும் தனியார் மருத்துவமனையில் மார்க்கெட்டிங் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவமனையின் சிகிச்சை முறைகளைத் தெரிந்துகொண்ட செம்பியன், தொடர்ந்து சில டிப்ளமோ படிப்புகளைப் படித்து முடித்து இணையத்தில் தன் வயது மற்றும் பெயருடன் ஒத்த நிஜ மருத்துவர் செம்பியனின் சுயவிவரத்தை எடுத்து அதில் தன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார். அனைத்திலும் தன் விவரங்களைப் பதிவு செய்த பின் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன் சொந்தமாக தரமணியில் க்ளினிக் ஒன்றையும் திறந்துள்ளார். இந்நிலையில் நிஜ மருத்துவர் செம்பியன் வந்ததால் போலி மருத்துவரான ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர் செம்பியன் மாட்டிக்கொண்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.