
விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஆனையூர் அருகே செயல்பட்டு வந்த நிராத்திலிங்கம் என்ற பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து சுரேஷ் என்பவரை உயிரிழந்த நிலையில் மீட்டனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே விதிமீறலுக்காக ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் விதியை மீறி தொடர்ந்து அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.