மழைநீரை முறையாகப் பயன்படுத்தாமல், கடலில் வீணாகக் கலப்பதைத் தடுப்பதற்கு நிபுணர் குழு அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், ‘கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் கழித்து, சென்னையில் மீண்டும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது. இதற்குக் காரணம், நிலத்தடி நீர் முறையாக சேமிக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் நேரடியாக கடலுக்குச் சென்று வீணாகிறது.
மழைநீரை முறையாகப் பயன்படுத்தாமல், கடலில் வீணாகக் கலப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும், அதேபோல மழை நீரோடு கழிவுநீர் கலந்து செல்வதையும் தடுக்க முடியவில்லை. அதிகப்படியான நீரை சேமித்து வைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இருவர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்தப் பிரச்சனை தீவிரமானது. நிபுணர்களைக் கலந்தாலோசித்தால், இந்த விவகாரம் சிறப்பாகக் கையாளப்படும். இந்த விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் இல்லாததால், நாங்கள் தீர்மானிக்க முடியாது’ என்று குறிப்பிட்டனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவை நியமிக்க நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்த விவகாரத்தில் சில அறிவியல் ஆய்வுகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக, வருகிற 18ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.