Skip to main content

EXCLUSIVE: திரிசங்கு நிலையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம்.!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

thiru

 

  கல்வி நிறுவனங்கள், தொழில்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சர்ச்சுகளை நிர்வாகம் செய்ய வேண்டியவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், பல்வேறு குளறுபடிகள் நிகழ, நிர்வாகம் செய்ய முடியாமல் திரிசங்கு நிலையில் இருக்கின்றது தென்னிந்திய திருச்சபையான (சி.எஸ்.ஐ) தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்.

 

 " தென்னிந்திய திருச்சபை என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை உள்ளடக்கியதாகும். இதில் மொத்தம் 24 திருமண்டலங்கள் (டயோசீசன்) உள்ளன. இதில் தூத்துக்குடி பிஷப் கால்டுவெல்சபை, சாயர்புரம் போப் சபை, நாசரேத் மெர்க்காசிஸ் சபை, கோவில்பட்டி ரேக்லாண்ட் சபை, சாத்தான்குளம் சபை மற்றும் மெய்ஞானபுரம் சபை உள்ளிட்ட 6 சபை மன்றங்களையும், 106 சேகர மன்றங்களையும் உள்ளடக்கியது தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம்.

 

    2003ல் திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து பிரிந்து புதிய திருமண்டலமான உருவான இத்திரு மண்டலத்தை நிர்வகிக்க திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் மற்றும் சேகரமன்ற பிரதிநிதிகளை தேர்வு செய்து, அவர்களைக் கொண்டு லே செயலாளர், திருமண்டல உபதலைவர், குருத்துவசெயலர் உள்ளிட்டோர் தேர்தல் மூலம் தேர்வது செய்வது தான் வழக்கமான ஒன்று. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலில் 2003ம் ஆண்டில் இடைக்கால நிர்வாக கமிட்டியாக டி.எஸ்.எப். அணி வெற்றிப் பெற்றது. அதன் பின்னர் 2006ல் நடைப்பெற்றத் தேர்தலில் மீண்டும் டி.எஸ்.எப்.அணியினரும், அதற்கடுத்து 2011ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் அப்போதைய பிஷப் ஜெபச்சந்திரன் ஆதரவுபெற்ற டி.மோகன்ராஜ் அருமைநாயகம் அணியினரும், 2014ல் நடைபெற்ற 3வது திருமண்டல பொதுத்தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தைக் கைப்பற்றினர்.

 

  தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ) தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், தொழில்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சர்ச்சுகளை நிர்வாகம் செய்யவே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  திருமண்டல  தலைவராக பேராயர் செயல்படுகிறார். அவர் ஒரு முறை தேர்வு செய்யப்பட்ட பின்பு ஓய்வு பெறும் வரை (67 வயது வரை) பணியில் செயல்படுவார். மற்ற நிர்வாகிகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி இந்தாண்டு நடைபெறவேண்டிய தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்த திருமண்டல செயற்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 17ம் தேதி திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் சேகரமன்ற பிரதிநிதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்றும், தொடர்ந்து பல்வேறு கட்ட தேர்தல்கள் நடத்தப்பட்டு இறுதியாக ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் திருமண்டல பெருமன்றத்திற்கான (லே செயலாளர், திருமண்டல உபதலைவர், குருத்துவசெயலர்) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

     இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர் பட்டியல் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அனைத்து சேகரங்களிலும் வெளியிடப்பட்டது. அதில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிலர் திருமண்டல தேர்தல் விசாரணைக்குழுவிடம் முறையீடு செய்தனர். அதிலும் பலருக்கு வாக்குரிமை கொடுக்கப் படவில்லை. திருமண்டல தேர்தலில் லே செயலாளர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட டி.துரைராஜ் மற்றும் ஸ்டேன்லி வேதமாணிக்கம், ஆனந்தராஜ், ஆரோன் ஆகியோரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் துரைராஜ் உள்ளிட்ட 4 பேரையும் அவர்களது சேகரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று திருமண்டல தேர்தல் அலுவலர் மற்றும் பேராயருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை  உத்தரவிட்டது. அதன்பின்பும் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் வெளியிடாமல் காலம் தாமதம் செய்து வந்ததால் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பேராயர் மற்றும் பொருளாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததோடு, தேர்தலுக்கும் தடைவிதிக்க வேண்டுமென்று கூறியிருந்தனர்.

 

     இந்த வழக்கை விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி முரளிதரன் கடந்த ஜூன் 14ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கு ஜூன் 17ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடைவிதித்து உத்தரவிட்டதோடு இது தொடர்பாக பேராயர் மற்றும் பொருளாளர் தங்கள் தரப்பு விளங்களை அளிக்கவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஜூன் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். ஆனாலும் பேராயர் தேவசகாயம் தரப்பினர் அனைத்து சேகரங்களிலும் திட்டமிட்டப்படி முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களை நடத்தினர். இதனையடுத்து துரைராஜ் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பேராயர் தேவசகாயம், சேகரதலைவர்கள் மூலம் தேர்தலை நடத்தி விட்டதால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும், தேர்தலை ரத்து செய்யவும் கோரி மனு தாக்கல் செய்தனர்.

 

stanly

   

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்த நிலையில் நடத்தப்பட்ட தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலை ரத்து செய்வதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி சித்தார்த்தர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் மறு அட்டவணை வெளியிட்டு, திருமண்டலத்திற்கு மறு தேர்தலை நடத்தவேண்டும் என்றும் கூறினார். மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி தேர்தல் நடத்தியதற்காக பேராயர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 15 நாள் சிவில்  சிறைதண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாகவும் கூறினார். மேலும் முதலில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி மனுதாரர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்குரிமை அளிக்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்தற்காக தொடரப்பட்ட வழக்கிலும் பேராயர் மற்றும் பொருளாருக்கு 15 நாள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாகவும் உத்தரவிட்டார். இதனையடுத்து பேராயர் தேவசகாயம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

 

   இந்நிலையில் ஆகஸ்ட் 29ம் தேதியுடன் நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி தேர்தலை நடத்தியத்திற்காக பேராயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி சித்தார்த்தர் தேர்தலை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்படி திரிசங்கு நிலையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் உள்ள நிலையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 

    நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பேராயர் நிர்வாகம் நடத்தக்கூடாது என்று ஒரு தரப்பினர் சி.எஸ்.ஐ.தலைமை அலுவலகமான சினாடு அலுவலகத்தில் பிரதம பேராயர் ஓமன் தாமஸிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே பேராயர் தேவசகாயம் தேர்தலை நடத்தவில்லை. நாங்கள் நடத்தினோம் என்று லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன், குருத்துவ செயலாளர் தேவராஜ் ஞானசிங் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புதிய மனுதாக்கல் செய்துள்ளனர். திருமண்டல மூலச்சட்டங்களின் அடிப்படையில் பேராயர் ஆலோசனையில் பொருளாளர் தான் தேர்தலை நடத்தவேண்டும். லே செயலாளரே தனது தேர்தலை தானே நடத்தி கொள்வதாக கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நீதிமன்றத்தை ஏமாற்றி திசைதிருப்பி இதுவரை நடந்த தேர்தலை நியாயப்படுத்த முயலுவதாக வழக்கு தொடர்ந்த ஸ்டேன்லி வேதமாணிக்கம் கூறினார். நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் தேர்தலை நடத்தியது மிகவும் தவறான முன்உதாரணமாகும். பாதிக்கப்பட்ட அனைவரையும் இணைத்துதான் தேர்தலை நடத்தவேண்டும் என நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். எனவே நீதிமன்ற உத்தரவின்படி மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.

 

     நீதிமன்ற உத்தரவை மீறி தேர்தல் நடத்தியதோடு இதுவரை இல்லாத வகையில் லே செயலாளர் தேர்தலை நடத்தினார் என்று கூறியிருப்பதால் பேராயர் மற்றும் லே செயலாளர் தரப்பினருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கலாம் என்று எதிர் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே ஏற்கனவே உள்ள நிர்வாகத்தில் பதவி காலம் முடிவடைந்தவர்களை கொண்டே தற்காலிக கமிட்டி அமைத்து நிர்வாகத்தை தொடர்ந்து செயல்படுத்த பேராயர் முயற்சிப்பதாகவும் அதனை பிரதம பேராயர் தடுத்து நிறுத்தவேண்டுமென்றும் முன்னாள் லே செயலாளர் டி.துரைராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாகிகள் இல்லாததால் கல்வி நிறுவனங்கள், தொழில்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சர்ச்சுகளில் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் திரிசங்கு நிலையில் இயங்கி வருகின்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்