காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 76) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று (15.12.2024) மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அமைதிப் பேரணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, வசந்தகுமார் உள்ளிட்ட பலரும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். இறுதிச் சடங்குக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இரங்கல் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த இரங்கல் கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குறித்து பேச இருக்கிறார்கள்.