பெண் ஒருவர் ஓட்டிவந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்டல் என்ற பெண் ஒருவர் தனக்கு சொந்தமான காரில் நாகர்கோவில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மத்திக்கோடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்க முயன்ற நபர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்து சம்பவத்தில் கார் மோதிய வேகத்தில் கீழே விழுந்த சர்வேஸ்வரன் என்ற இளைஞரும் காரை ஓட்டி வந்த கிரிஸ்டலும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.