Skip to main content

100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்துடன் தொழிற்பயிற்சி; கூடுதல் நிதி ஒதுக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை :  ’’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. திறன் பயிற்சி இல்லாத தொழிலாளர்களை அடுத்த நிலைக்கு முன்னேற்றும் நோக்கத்துடன் அரசு உருவாக்கியுள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

 

p

 

கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும், பாசனக் கட்ட மைப்புகளை உருவாக்கவும் வசதியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலை வழங்கப்படும். மாநிலத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.168 முதல் ரூ.273 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ரூ.224 ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரே மாதிரியான  வேலை வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் புதிதாக கற்றுக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலையை மாற்றும் நோக்கத்துடன் இத்திட்டத்தின் பயனாளி களுக்கு தொழிற்பயிற்சி வழங்க அரசு முன்வந்துள்ளது.

 

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இத்திட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பு, அறுவடை செய்யப்பட்ட தானியங்களை சேமித்து வைத்தல் ஆகிய பணிகள் குறித்து குறுகிய கால பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, கொத்தனார், பிளம்பர் போன்ற பணிகளுக்கு 40 நாட்கள் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில்  பங்கேற்க விரும்புவோருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதுடன், ஒரு நாளைக்கு ரூ.250 வரை ஊக்கத்தொகையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் இப்பயிற்சி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை செயலர் அமர்ஜித் சின்ஹா கூறியுள்ளார்.

 

மத்திய அரசின் இந்தத் திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிகளைச் செய்ய எந்த பயிற்சியும், திறமையும் தேவையில்லை. அவர்கள் ஒரே மாதிரியான பணிகளை செய்வதால் அவர்களின் திறமைகள் எந்த வகையிலும் மேம்பட வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்றாலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு மட்டும் தான் அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பெரும்பான்மையான குடும்பங்களுக்கு  ஆண்டுக்கு சராசரியாக 40 முதல் 45 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு போதுமானதல்ல. அவர்களுக்கு வேறு வேலை தெரியாது என்பதால் வாழ்வாதார பாதுகாப்பும் இல்லை.

 

மாறாக, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கொத்தனார், பிளம்பர், இயற்கை உரம் தயாரிப்பு, தானியங்கள் சேமிப்பு போன்ற தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெற முடியும். அதுமட்டுமின்றி, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை விட பல மடங்கு கூடுதல் ஊதியம் கிடைக்கும். அந்த வகையில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு வழங்கக்கூடிய இந்த திட்டம் உண்மையில் வரப்பிரசாதம் ஆகும். இதற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியின் போது ஊக்கத் தொகையாக தினமும் ரூ.250 வரை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு ஆகும். ஆகவே, தொழிற்பயிற்சி திட்டத்தை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி, அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.

 

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஒருவர் தொழிற்பயிற்சி பெறும் போது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக வேலை வழங்கப்பட வேண்டிய நாட்களின் எண்ணிக்கை 60&ஐத் தாண்டும். அதனால், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவு அதிகமாகும். அதை ஈடு செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.’’
 

சார்ந்த செய்திகள்