சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட புனிதா என்ற மாணவியின் வீட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ''நீட் தேர்வு தோல்வியால் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். தேர்தல் நேரத்தில் பரப்பரையாற்றினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று 41 மாத காலம் ஆகியும் நீட் தேர்வுக்கு எவ்வித முடிவு ஏற்றப்படவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஒரு கூட்டத்தில் பேசுகின்ற பொழுது நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருப்பதாகச் சொன்னார். 41 மாதமாகியும் கூட அந்த ரகசியத்தை வெளியிடவில்லை. அதோடு நீட் தேர்வு ரத்து செய்வதற்கு தமிழகத்தில் ஒரு கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அந்த ஒரு கோடி கையொப்பம் பெற்றதாக அறிவித்தார்கள்.
திமுகவின் இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த இளைஞரணி மாநில மாநாட்டில் முதலமைச்சரும் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த மாநாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற படிவத்தை கூட்டத்தில் வைத்திருந்தார்கள். அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மக்களிடம் பெறப்பட்ட கையொப்ப படிவம் அங்கே கூடியிருந்தவர்கள் காலுக்கடியில் கிடந்த காட்சியெல்லாம் பார்த்தோம். அதோடு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
ஆட்சிப் பொறுப்பேற்று 41 மாத காலமாகியும் இந்த நீட் தேர்வு ரத்து செய்வதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இதனால் என்ன நன்மை இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது எந்த விவரமும் தெரியவில்லை. இப்படி நாட்டு மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவும் திமுக அரசும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நம்பி ஏமாந்த மாணவர்கள் மாணவிகள் புனிதா போன்ற மாணவிகள் எல்லாம் நீட் தேர்வின் விளைவாக தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அரசினுடைய போலி நாடகம். திமுக கட்சியினுடைய போலி அறிவிப்பின் மூலமாக விலைமதிக்க முடியாத மாணவர்களுடைய உயிரிழப்பை நாம் சந்தித்திருக்கிறோம். இது மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்றார்.