பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு வந்த அந்த டிப்-டாப் ஆசாமி, தம்மை போக்குவரத்துக் கழக எம்.டி என்று அறிமுகம் செய்துகொண்டு, பழனி அடிவாரத்தில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியில் இலவசமாக அறை ஒதுக்க வேண்டும் என அதிகாரத் தோரனையில் கேட்டுள்ளார்.
அவரது ஐ.டி கார்டை வாங்கிப் பார்த்த தேவஸ்தான ஊழியர், அது போலி என்பதைப் புரிந்துகொண்டு, நீங்க ஐஏஎஸ் ஆக இருந்தாலும், உள்ளூர் வருவாய்த்துறையில் யாரையாவது உங்களுக்கு சிபாரிசு பண்ணச் சொல்லுங்கள் என்றார்.
இதற்கு போலி ஐஏஎஸ் அதிகாரி குமார் பிதற்றலாக பேசியதுடன், அங்கிருந்து நழுவிச் செல்வதில் குறியாக இருந்திருக்கிறார். சுதாரித்த அறநிலையத்துறை ஊழியர்கள், அவரை மடக்கிப் பிடித்து பழனி அடிவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த குமார் காரில் சைரன், தமிழ்நாடு அரசு என்ற பதாகையை மாட்டிக்கொண்டு வலம்வந்ததும், பல இடங்களில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.
கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற குமார், அங்கிருந்தவர்களை ஏமாற்றி சிறப்பு தரிசனம் செய்துவிட்டு வந்ததும், பழனியில் அதேபோன்று ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி சலுகைகளைப் பெற நினைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.