
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாக திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுக்கள் குவிந்தபடி இருக்கிறது. அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இந்தப் புகார்களை அனுப்பி வைத்தபடி இருக்கின்றன.
ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து ஆ.ராசா பிரச்சாரம் செய்தபோது, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார் ஆயிரம் விளக்கு தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் என்.வைத்தியநாதன்.
ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடம் வைத்தியநாதன் கொடுத்துள்ள புகாரில், “தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக முதலமைச்சரை கண்ணியமற்ற வகையில் பேசியுள்ளார் ஆ.ராசா. ஒரு எம்.பி. இப்படி கட்டுப்பாட்டை இழந்து பேசுவது கண்டனத்திற்குரியது. ஆபாசமும் அநாகரிகமும் நிறைந்த ஒருவரால்தான் இப்படிப் பேச முடியும். இத்தகைய பேச்சு வன்கொடுமை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் இருக்கிறது. ஆ.ராசாவின் தரக்குறைவான அநாகரிகமான பேச்சை, அவர் அருகில் இருந்த திமுக வேட்பாளர் எழிலனும் தடுக்க முயற்சிக்கவில்லை. அதனால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார் வைத்தியநாதன்.
அதேபோல, அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் இணைச்செயலர் பாபு முருகவேல் கொடுத்துள்ள புகாரில், ஆ.ராசா என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார் எனச் சுட்டிக்காட்டிவிட்டு, “ஆ.ராசாவின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்த இழிசெயலுக்கு எதிராக நடக்கும் கண்டனப் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக, ஆ.ராசாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் செய்ய அவருக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் பாபு முருகவேல்.
இதைப்போலவே, பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிவதால், இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்வது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிற தேர்தல் ஆணைய அதிகாரிகள், இது குறித்த புகார்களை டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தபடி இருக்கின்றனர்.