
தினகரன் கட்சியை அரசியல் கட்சியாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் ஓஎஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பூங்காக்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 5 சிறுவர் பூங்காக்களை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வர் துணை முதல்வரை தவிர அனைவரும் தன் பக்கம் வர தயார் என தினகரன் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தினகரன் சொல்லிவிட்டா நாளை முதல் கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதிக்கும். மேற்கே மறைகின்ற சூரியன் கிழக்கே மறையும்.அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் என்னுடன் வர தயார் என சில்லறை கட்சியை நடத்தும் டிடிவி தினகரன் கூறியிருப்பது 2018- இன் மிகப்பெரிய காமெடியாகத்தான் பார்க்கிறேன்.
தினகரன் கட்சியை அரசியல் கட்சியாக நாங்கள் ஏற்று கொண்டதே கிடையாது. மதவாதத்தையும் காவியையும் ஒழிப்போம் எனக்கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக ஆட்சியில் மத்திய அரசிடம் இணக்கமாக இருந்த காலகட்டத்தில் திமுகவிற்கு காவி நிறம் தெரியவில்லையா என்றார்.