Skip to main content

வன விலங்குகளுக்கு நடுவே பீதியுடன் நடக்கும் மக்கள்!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

கிராமச் சாலையை உடைத்துப் போட்டுவிட்டு ஊருக்குப் போன அதிகாரிகள் சில மாதங்கள் கடந்தும் இன்னும் திரும்பியே வரவில்லை. இதனால் மரண பயத்துடன் ஒவ்வொரு நாட்களையும் கடக்கிறோம் என்கின்றனர் கிராம மக்கள்.

 

Erode road issue

 



ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலம், பல லட்சம் ரூபாய் செலவில் அந்த சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், சங்கராப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வட்டக்காடு பால் கொள்முதல் நிலையத்தில் இருந்து, காக்காயனூர் செல்லும் வரை புதிய தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பால் கொள்முதல் நிலையத்தில் இருந்து காக்காயனூர் வரையிலான நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு, பழைய சாலைகளை பெயர்த்தெடுத்தனர்.  பழைய தார்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டதோடு சரி, சாலையை உடைத்த ஊழியர்கள் பிறகு வரவே இல்லை. புதிய தார்சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், தார்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டதால், அந்தியூரில் இருந்து காக்காயனூர்‌ செல்லும் பேருந்து, நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, வட்டக்காட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நான்கு  கிலோமீட்டர் தூரம்  நடந்தே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக இது அடர்ந்த வனப்பகுதி யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளது. பொதுமக்கள், இரவு நேரங்களில் கிராமத்திற்குச் செல்ல அச்சத்தோடு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப் பணியை, துரிதப்படுத்தி விரைவில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் ஒரு வேலையும் நடக்கவில்லை என்பது பரிதாபம்தான்.
 

 

சார்ந்த செய்திகள்