ஜாமீன் நிபந்தனைகளின்படி விருதுநகர் மாவட்டத்தைவிட்டு வேறு எங்கும் செல்லமுடியாத முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ‘மோடி சொன்னா கேட்கணும்..’ என்ற பழைய நிலைப்பாட்டை இன்று வரையிலும் கடைப்பிடித்து வருகிறார்.
75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு, அதிமுக நிர்வாகிகளை அழைத்து, சிவகாசி – திருத்தங்கல்லில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடியேற்றி சல்யூட் வைத்து, இனிப்பு வழங்கியிருக்கிறார். அமைச்சராக இருந்தபோது அரசியல் மேடைகளில் காமெடியாகப் பேசி மு.க.ஸ்டாலினைப் பகைத்துக்கொண்ட, ராஜேந்திரபாலாஜி, தற்போது ‘சைலன்ட்’ மோடுக்கு மாறிவிட்ட நிலையில், ஆன்மிக ஈடுபாட்டுடன்கூடிய டெல்லித் தொடர்புகளை விட்டுவிடாமல், தொடர்ந்து ‘மெயின்டெய்ன்’ பண்ணிவருகிறார்.
அதிமுக மேல்மட்டத் தலைவர்கள்கூட, தேவையென்றால் பயன்படுத்திக்கொள்வதும், அப்புறம் கைவிடுவதுமாக நடந்துகொள்ளும் நிலையில், டெல்லி ‘குட்-புக்’கில் தன்னுடைய பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதேநேரத்தில், தப்பித்தவறியும்கூட ‘நான் திராவிட மாடல் இல்லை’ என்பதை, தேசிய நீரோட்டத்தில் கால் நனைத்து, திமுக ஆட்சிக்கு எதிரான அரசியலை வெளிப்படுத்தியிருக்கிறார்.