Skip to main content

கரோனா கால கொடுமை...! - கந்துவட்டி கும்பலிடம் சிக்கிய ஆட்டோ டிரைவர் குடும்பம்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

erode police petition incident

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்த அத்தாணி கருவல்வாடிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது கமலா என்பவர் 29-ஆம் தேதி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தனது குடும்பத்தினருடன் வந்து எஸ்.பி. தங்கதுரையை சந்தித்து மனு கொடுத்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

 

"எனது கணவர் பெயர் ஆறுமுகம். ஆட்டோ வைத்துள்ளார். கரோனா காலத்தில் தொழில் இல்லாமல் சிலரிடம் கடன் வாங்கியிருந்தார். அது கந்துவட்டி என்று பிறகுதான் தெரிந்தது. சரியாக வேலை இல்லாததால், கடனை அடைக்க முடியவில்லை. இந்நிலையில், அத்தாணியில் உள்ள பவானி பிரிவு ரோட்டில், இரு நாட்களுக்கு முன்பு, எனது கணவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு அவர்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அத்தாணி பகுதியைச் சேர்ந்த கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் சிலர், அவரது கூட்டாளிகளுடன் வந்து, எனது கணவரை அடித்து உதைத்து, 'கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை, உனக்கு எதுக்கு ஆட்டோ?' என்று கூறி எனது கணவரின் ஆட்டோவை எடுத்துச் சென்றுவிட்டனர். 

 

இதையடுத்து காயம்பட்ட எனது கணவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தோம். பிறகு, ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த சிலர் என்னை ஃபோனில் தொடர்புகொண்டு, 'வழக்கைத் திரும்பப் பெறவில்லை என்றால் பல்வேறு விளைவுகளை நீயும் உனது குடும்பமும் சந்திக்க நேரிடும்' என்று மிரட்டி வருகின்றனர். இதனால் எனக்கும் எனது கணவர் மற்றும் எனது குடும்பத்தார் அனைவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட எஸ்.பியிடம் கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து எனது கணவரின் ஆட்டோவை மீட்டு எங்களது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டேன்" என்றார்.

 

கரோனா கால கொடுமையில், கந்து வட்டிக்குப் பணம் வாங்கி, குடும்பச் செலவு செய்ய வேண்டிய அவல நிலைக்கு, ஏராளமான தொழிலாளர்கள் தள்ளப்பட்டார்கள். இப்போது கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிய இதுபோன்ற அப்பாவிகளை யார் காப்பாற்றுவது?

 

 

 

சார்ந்த செய்திகள்