Skip to main content

புதுசு, புதுசாக.. தினுசு ... தினுசாக... -மக்கள் இழந்த 500 கோடி...! அதிர்ச்சித்தகவல் ...

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
cr

 

ஆடு கொடுக்கிறோம், கோழி கொடுக்கிறோம், ஈமு கோழி வளர்க்க கொடுக்கிறோம் என்று விதவிதமாக களத்தில் இறங்கி மக்களின் பண ஆசையை தூண்டி அவர்களிடம் இருக்கும் சொற்ப பணத்தையும் வசூலித்துக் கொண்டு கடையை இரவோடு இரவாக மூடிவிட்டு மாயமாகி விடுவது மோசடி கம்பெனிகளின் வழக்கம்.   அதில் பணம் கட்டி ஏமாறுவதும் நம் மக்களின் தொடர் வழக்கமாக உள்ளது.  அந்த வரிசையில் தங்க நகை நிறுவனம் என்ற பெயரில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என மேற்கு மண்டலத்தில் கடையை விரித்து கல்லா கட்டிக் கொண்டு ஓடி விட்டது முல்லை ஜுவல்லரி என்ற ஒரு டூ பாக்கூர் கம்பெனி.

 

இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் பல மனுக்களை கொடுத்தனர். திடீரென  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. அவர்களும்  மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கண்ணீர் சிந்தினார்கள். 

 

நாங்களெல்லாம் ஒரு மோசடி கம்பெனியை நம்பி ஏமாந்து விட்டோம் என்ற அவர்கள் மேலும் "கோவையை தலைமையிடமாக கொண்டு முல்லை ஜுவல்லரி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்த ஜுவல்லரி கடையின் கிளை சேலம்,  ஈரோடு, திருப்பூர் என பல  மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.  மூன்று மாத காலமாக இதன் கிளை அலுவலகம் ஈரோடு பஸ் நிலையம் அருகே இருந்தது. 


இந்த முல்லை ஜுவல்லரி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்கள். மாத தவணைத் திட்டம் ஒன்றையும் அறிவிப்பு செய்திருந்தார்கள். அதன் பேரில் அத்திட்டத்தில்  மாதம் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் அதற்கு 20 சதவீதம் வட்டி போட்டு மூன்று மாதம் முடிந்ததும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள்.

 

அதே போல மூன்று மாத தவணைத் திட்டம் ஆறு மாத கால  தவணைத் திட்டம் நகை சேமிப்பு திட்டம் என பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து இருந்தனர் இதனை நாங்கள்   நம்பினோம். அதில் பணம் கட்டினோம்.  ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலா ஒரு நபர் 20 ஆயிரம் முதல ரூ. 5 லட்சம் வரை செலுத்தியிருக்கிறோம். ஒரு லட்சத்திற்கு ஒரே மாதத்தில் இருபதாயிரம் கூடுதலாக கிடைக்கிறது என்ற ஆசை தான். 

 

ஆனால் அவரகள் கூறியபடி எங்களுக்கு திருப்பி  பணம் கொடுக்கவில்லை.  இது சம்பந்தமாக அந்த அலுவலகம் சென்று  கேட்டால் அப்போதைக்கு ஏதேதோ சொல்லி காலம் கடத்தி விட்டனர். ஆனால் இப்போது திடீரென கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார்கள். இதனால் நாங்கள் எல்லோரும் பல கோடிக்கணக்கான  பணத்தை இழந்து ஏமாந்து விட்டோம். ஆகவே  எங்களிடமிருந்து ஏமாற்றிய  பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பணம் திரும்ப கிடைக்குங்களா சார்..." என பரிதாபமாக கேட்டனர். 

 

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இருநூறு கோடி திருப்பூர், கோவை என பல ஊர் மக்கள் 500 கோடி ஏமாந்துள்ளனர்.   தங்கத்தின் மீது பணம் போட்டால் தங்கமாக திருப்பி வரவேண்டாம்.  போட்ட பணமே திரும்பி வராது என இது போன்ற மோசடி கம்பெனிகள் புதுசு.. புதுசாக... தினுசு ... தினுசாக கிளம்பியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்