தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்துள்ளது. மேலும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை என அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று முதல் மே 21 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாளை (18.05.2024) முதல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. கேரளாவில் 20 ஆம் தேதி அதிகனமழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த மற்றொரு வானிலை அறிவிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி 5 ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடிக்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனிடையே, தென்காசி பழைய குற்றால அருவியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின்(17) தனது குடும்பத்தாருடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்தச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். மேலும், அவர் உட்பட 5 பேர் அந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். அதில், 4 பேரை அங்கிருந்தவர்கள், நல்வாய்ப்பாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் ஆகியோர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சிறுவன் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.