நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். நட்சத்திர தொகுதியான அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். ரேபரேலி தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ரேபரேலி தொகுதியில் இன்று (17-05-24) காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “என் மகனை உங்களிடம் (மக்களிடம்) ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை எப்படி நடத்தினீர்களோ, அதே வழியில் இப்போது ராகுலையும் நடத்துங்கள். அவர் உங்களை ஏமாற்ற மாட்டார். இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களைத்தான் ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் நான் கற்றுக் கொடுத்தேன். அனைவரையும் மதிக்கவும், பலவீனமானவர்களைக் காக்கவும், மக்களின் உரிமைகளுக்காக அநீதிக்கு எதிராகப் போராடவும் பயப்பட வேண்டாம். ஏனென்றால் உங்கள் போராட்டத்தின் வேர்கள் மற்றும் மரபுகள் மிகவும் ஆழமானவை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடையே இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நான் உங்களுக்கு நன்றியுள்ளவராக இருக்கிறேன். உங்கள் முன் என் தலை வணங்குகிறேன். 20 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். இதுவே என் வாழ்வின் மிகப்பெரிய சொத்து. ரேபரேலி எனது குடும்பம், அதேபோன்று அமேதியும் எனது வீடு. எனது வாழ்க்கையின் மென்மையான நினைவுகள் இந்த இடத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் வேர்களும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த மண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. அன்னை கங்கையைப் போன்ற புனிதமான இந்த உறவு, அவாத் மற்றும் ரேபரேலி விவசாயிகள் இயக்கத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது” என்று கூறினார்.