பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக திருச்சி முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவதூறாக பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார். ஆனால் அந்தப் புகாரை பெண் காவலர்கள் மறுத்தனர். இதன் பின்னர் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி நேற்று (16-05-24) மதியம் சவுக்கு சங்கரை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் நேற்று மதியம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதற்கு சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸ் காவலில் கொடுத்தால் அவர் தாக்கப்படுவார். எனவே கஸ்டடி தரக்கூடாது என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது, சவுக்கு சங்கருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா இன்று (17-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஒரு யூடியூபரை கைது செய்திருக்கிறார்கள். அவர் என்னை பற்றியும் தப்பா பேசுனவருதான். சவுக்கு சங்கருக்கு யாருமே நேர்மையான ஆள் கிடையாது. அது தான் அவருடைய கொள்கை. அதனால், அவரை கைது செய்ததில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதுக்காக கையை உடைக்கணுமா?. இது காவல்துறையினருடைய மோசமான நடவடிக்கை.” என்று கூறினார்.