நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே பல்வேறு ஊடகங்களுக்கு பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வருகிறார். இது போன்ற ஒரு பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “சில அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆட்கள் இல்லை. அதே சமயம் பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்தk கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதைக் காட்ட முடியுமா. பேருந்து சேவையால் மெட்ரோ ரயில் சேவையின் பாதிப்பதை நிரூபிக்க முடியுமா. சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பல ஆண்டுகளாக மத்திய அரசு நிதி தராமல் நிறுத்திவைத்திருப்பது ஏன். பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.