நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று (16-05-24) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிரதமராக பதவியேற்று பத்து ஆண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்காதது பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நான் ஒருபோதும் நேர்காணல்களை மறுத்ததில்லை. நம் நாட்டில், நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. உங்கள் கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவிக்கலாம், அது பரப்பப்படும். நான் அந்தப் பாதையில் செல்ல விரும்பவில்லை. நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் விக்யான் பவனில் ரிப்பன்களை வெட்டலாம் மற்றும் பத்திரிகைகளில் இடம்பெறலாம். ஆனால் நான் அதை செய்யவில்லை. மாறாக, நான் ஜார்க்கண்டில் உள்ள ஒரு சிறிய மாவட்டத்திற்குச் சென்று திட்டங்களில் வேலை செய்கிறேன். புதிய வேலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். புதிய கலாச்சாரம் சரியானது என்று ஊடகங்கள் நம்பினால், அதை அப்படியே முன்வைக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
நான் பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியவன். அங்கு கேட்கப்படும் எந்தவொரு கேள்விக்கும் நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். இன்றைய ஊடகங்கள் முன்பு போல் இல்லை. இது ஒரு தனி நிறுவனம் அல்ல, மக்கள் அதை புரிந்துகொள்கிறார்கள். முன்பெல்லாம் ஊடகங்கள் முகமற்றவையாகவே இருந்தன. மக்கள் எதையாவது படித்து அதை ஒரு பகுப்பாய்வு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. ஊடகம் தகவல் தொடர்புக்கான ஆதாரம் மட்டுமே அல்ல. இன்று அது ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. குடிமக்களுடன் தொடர்புகொள்வதே இறுதி நோக்கம்” எனக் கூறினார்.