
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக இன்று காலை 6 மணியில் இருந்து சோதனையை தொடங்கியுள்ளனர். மேலும் அவரது வங்கி கணக்கில் அதிக பரிவர்த்தனை காணப்பட்டதால், அதிகாரிகள் இந்த சோதனையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
மேலும் இவரது சகோதரரான ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள டிவிஹச் (True value home ) என்னும் கட்டுமான நிறுவனத்திலும், அவரது வீட்டில் அமலாக்கதுறை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சோதனைக்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது, தொடர்ந்து மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கும் நிலையில் அண்மையில் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தார். இது இந்தியளவில் பேசுபொருளாக மாறியது. இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு மூத்த திமுக அமைச்சர்களின் பட்டியலை கையில் எடுத்துள்ளதாம். அந்தவகையில் தான் தற்போது திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.