கடந்த பல மாதங்களாக பராமரிப்பின்றி இருந்த மின்பாதைகளில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று (23.06.2021) மாலை பலத்த சூரைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது காற்றில் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அதேபோல வல்லத்திராகோட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில், மின்பாதை ஆய்வாளர் கருப்பையா இரவு 9.30 மணிக்கு மின்பாதைகளில் கிடந்த மரக்கிளைகளை அகற்றிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பல வருடங்களாக மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் இப்படி பல ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் நடக்கின்றன. இனிமேலாவது மின்வாரிய ஊழியர்களின் உயிரைக் காக்கத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அரசு முன்வர வேண்டும் என்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.