ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளைச் சேர்ந்த பொது மக்களும் குடி தண்ணீரை தனியார் லாரிகள் மூலம் ஒரு குடம் பத்து ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஒரு சில நேரங்களில் லாரிகளில் தண்ணீர் வரவில்லை என்றால் பொதுமக்கள் பாடு கடும் திண்டாட்டம் ஆகி விடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு குடிநீர் தேவைக்காக தற்சமயம் தமிழக அரசு 211 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனி நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் ஏற்கனவே எட்டு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் முடிந்ததும் 53 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் அருள், மாணவர் அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன், ஏழாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மீரான் அலி, ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் நஸ்ருதீன், 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ஹாஜா சுகைபு, அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு இருபதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சேக் உசேன், 21 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் சித்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.