கொத்தமங்கலத்தில் சில குடும்பங்களுக்கு சென்ற குடிதண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் இரு குடியிருப்புகளுக்கு தண்ணீர் தடை செய்யப்பட்டுள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காலிக்குடங்குள், ஆடு, மாடுகளுடன் நீர்தேக்க தொட்டி மோட்டார் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டபனர். மோட்டார் அறைக்கும 2 பூட்டுகள் பூட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள 2 குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொது குழாய்கள் மட்டுமின்றி தனிநபர்களுக்கும் மாத கட்டணத்தில் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக குடிதண்ணீர் இணைப்புக்காக காத்திருந்த கூனரி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினர் வைப்புத் தொகை செலுத்தி கடந்த ஞாயிற்றுக் கிழமை புதிய இணைப்பு பெற்றுள்ளனர். அன்று ஒரு நாள் குடிதண்ணீர் கொடுக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே அந்த புதிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்கான வைப்புத் தொகை செலுத்தி குடிதண்ணீர் இணைப்பு பெற்ற நிலையில் காரணமின்றி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதே நேரத்தில் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குனரிடம் இருந்த மோட்டார் அறை சாவியை ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து வாங்கிச் சென்று விட்டதால் 4 நாட்களாக 2 குடியிருப்பு பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிலர் மோட்டார் அறைக்கு மற்றொரு பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். இதனால் குடிதண்ணீர் கிடைக்காமல் 2 குடியிருப்பு பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட குடும்பத்தினர் புதன் கிழமை காலை தண்ணீர் கிடைக்கவில்லை, இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு காரணம் தெரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காலிக்குடங்களுடன் தங்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை ஓட்டி வந்து குடிநீர்தேக்க தொட்டியின் அருகில் உள்ள பூட்டிய மோட்டார் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் வரை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் தொடர்ந்தது.
இது குறித்து போராட்டத்தில் இருந்த பெண்கள் கூறும் போது,
பல மாதங்களாக குடிதண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு நகைகளை அடகு வைத்து வைப்பு தொகை செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றோம். ஒரு நாள் தண்ணீர் கொடுத்ததுடன் மறுநாள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. அதனால் தான் எங்கள் குழந்தைகளை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவர்களையும் ஆடு, மாடுகளையும் காலிக்குடங்களுடன் மோட்டார் அறைக்கு வந்து காத்திருக்கிறோம். தண்ணீர் இணைப்பை சீரமைக்கும் வரை வீட்டுக்கு போகமாட்டோம் என்றனர். அதே நேரத்தில் மோட்டார் அறைக்கு மற்றொரு பூட்டு போட்டது யார் என்பது தெரியாமல் 4 நாட்களாக தண்ணீர் கொடுக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.