வேலூர் மக்களவை தேர்தல் களத்தில் பலர் வேட்பு மனுதாக்கல் செய்துயிருந்தாலும், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்க்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் தான் போட்டி .தேர்தல் தேதி அறிவித்தது முதல் ஏ.சி.சண்முகம் தேர்தல் களத்தில் வேகம் காட்டுகிறார் . வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தைமுடித்துள்ளார்.
கடந்த ஜூலை 17- ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர் என பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்து விட்டு, அப்படியே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் முதல் கட்டமாக கட்சியினரை சந்திப்பை முடித்துள்ளார். தற்போது தான் அனைத்து கட்சியினருடனான வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்துகிறார்.
ஜூலை 18 ஆம் தேதியான இன்று ஆம்பூர் நகரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தினர். இந்த தொகுதியின் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கழக பொருளாளரும், வேட்பாளரின் தந்தையுமான துரைமுருகன் கலந்துக்கொண்டு பேசிய போது, நான் என் மகனை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன், அவரை என் மகனாக பார்க்காதீர்கள், திமுக காரனாக பாருங்கள் என்றார்.