டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் வீரபாண்டி பட்டணத்தில் ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசு சார்பில் அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இன்று அந்த மணிமண்டபத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். மணிமண்டபம் திறக்கும் இந்த நிகழ்வில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்ரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர்.
அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி, பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதேபோல மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் நினைவுப் பரிசை வழங்கினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பேசிய பாலசுப்ரமணியன் ஆதித்தன், பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம், பொது சேவை என்று பல துறைகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியதால் என் தந்தை பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ஐந்து பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தனர், மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தது. இந்த சிறப்புகளுக்கு எல்லாம் வலுசேர்க்கும் வகையில் முதல்வர் உத்தரவின் பெயரில் அழகான மணிமண்டபத்தை இன்று தமிழக அரசு அமைத்துள்ளது. உழைப்போம் உயர்வோம் என்பதை தாரக மந்திரமாக கொண்டிருந்தார் சிவந்தி ஆதித்தனார். ஓய்வறியாத உழைப்பு அவரிடம் இருந்தது. அவருடைய உழைப்பை இந்த மணிமண்டபம் பிரதிபலிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்த மணிமண்டபம் திகழும் என பேசினார்.