Skip to main content

நாய்கள் கடித்து 25 ஆடுகள் பலி... பிழைக்க வந்த இடத்தில் நடந்த சோகம்...!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் என்பீல்டு மோட்டார் சைக்கிள் வாங்கிய கதை ஒன்று சுவாரஸ்யமாக பரவி வந்தது. ஒரு பட்டதாரி இளைஞன் தன் தந்தையிடம் என்பீல்டு பைக் கேட்க, அப்பாவும் எதுவும் சொல்லாமல் ரூ. 50 ஆயிரத்திற்கு 10 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தார்.

 

goats

 



8 மாதங்கள் வளர்த்த பிறகு என்பீல்டு பைக்கும் வாங்கியாச்சு, அப்பாவின் ரூ 50 ஆயிரம் கடனையும் அடைச்சாச்சு. அதனால ஆடு வளர்ப்பில் போடும் முதல் வீணாகாது. வேலை கிடைக்கவில்லை என்று வெட்டியாக வீட்டில் இருந்து கடனுக்கு பைக் வாங்கி பெற்றோருக்கு தொல்லை கொடுக்காமல் ஆடு வளர்த்தால் கடனாளியாகாமல் நினைத்ததை வாங்கலாம் என்ற பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது.

ஆனால் தற்போது வளர்த்த ஆட்டுக்குட்டிகளை நாய்களுக்கு இறையாக்கிவிட்டு ஒரு குடும்பம் ராமநாதபுரத்தில் கடனாளி ஆகியுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தான் செம்மறி ஆடுகள் வளர்ப்பது அதிகம். அந்தப் பகுதியில் வீடுகள் இருக்கும் வீட்டில் ஒன்று இரண்டு வயதான முதியவர்கள் இருப்பார்கள் மற்றவர்கள் ஆண், பெண் என அனைவரும் ஆடுகள் மேய்க்க மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றிருப்பார்கள். பொங்கல், தீபாவளிக்கு ஊருக்கு போகிறார்களோ இல்லையோ குலதெய்வம் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் தவறாமல் போவார்கள். மற்ற நாட்களில் டெல்டா மாவட்டங்களில் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வார்கள் டெல்டா விவசாய காலங்களில் புதுக்கோட்டை மாவட்டம் போன்ற பகுதிகளில் மேய்ப்பார்கள்.

 

dog


 



இப்படித்தான் ராமநாதபுரம் மாவட்டம் உடையார்வலசை கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் கோவிந்தராசு நூறு செம்மறி ஆடுகளை ஊர் ஊராக சென்று மேய்த்து வருகிறார். டெல்டாவில் இன்னும் அறுவடை தொடங்காததால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் கிடை அமைத்து தங்கி இருந்து ஆடுகளை மேய்த்து வருகிறார். 

ஆடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகள் ஆடுகளுடன் மேய்சலுக்கு நடக்க முடியாது என்று கிடையில் உள்ள பெரிய கூடையில் அடைத்துவிட்டு செல்வது வழக்கம். இன்று சித்திரவேல் என்ற விவசாயியின் தோட்டத்தில் கிடை அமைத்து அங்கே குட்டிகளை கூடையில் அடைத்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் இருட்டிய நேரத்தில் வந்து பார்த்த போது கிடையை சுற்றி நாய்கள் இருந்துள்ளது.

அவசரமாக கூடையை தூக்கிப் பார்த்தால் 25 ஆட்டுக்குட்டிகள் நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தது. இறந்த குட்டிகளை தூக்கி போகவே நாய்கள் வட்டமடித்தது. இதைப் பார்த்து கோவிந்தராசு உள்ளிட்டவர்கள் கண்ணீர் வடித்தனர். ஒரு வருட உழைப்பு அத்தனையும் ஒருசில மணி நேரத்தில் நாய்களால் பறிபோனதே என்று கதறினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 

சார்ந்த செய்திகள்