சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் 8 வழி சாலை திட்ட மேலாளர் மனு செய்துள்ளார்.
8 வழி சாலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களாக மேல்முறையீட்டுமனு நிலுவையில் இருப்பதாகவும், அதனால் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை நடத்தவேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதனை தடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தி சுயநல பசியை நிறைவேற்ற மத்திய -மாநில அரசுகள் கைகோர்த்துள்ளது. எட்டு வழிசாலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காலத்தில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு இவ்வளவு அவசரம் காட்டுவது வேதனையாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற வாதத்தை வைத்து மத்திய, மாநில அரசுகள் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. மக்களின் நலனுக்காக எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய- மாநில அரசு உடனே கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.