
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து தொடங்கி தற்போது விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை கர்நாடக அணைகளில் இருந்து 23,912 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று மாலை நேரத்தில் மொத்தமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 36,579 கன அடியாக அதிகரித்துள்ளது.