சேலம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், கட்சியின் முன்னோடிகளுள் ஒருவருமான பட்டணம் ப.தா.முத்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை வயது மூப்பினால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ப.தா.முத்து, சேலம், நாமக்கல் ஆகியவை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மற்றொரு முக்கியத் தலைவராக இருந்த ஈ.ஆர்.கிருஷ்ணனுக்குப் பிறகு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 1968 முதல் 1974ம் ஆண்டு வரை தமிழக சட்டமேலவை உறுப்பினர் பதவியிலும் இருந்தார். திமுக தலைவர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடன் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தார்.
''ப.தா.முத்து மாவட்டச் செயலாளராக இருந்தபோது, கட்சிக்கூட்டங்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சிப்பணிகளுக்காக சொந்த ஊரில் இருந்து சேலம் வந்தார் எனில், அப்போது சேலம் நகராட்சிக்குச் சொந்தமான விடுதியில்தான் தங்குவார். அப்போதைய நிலையில் ஒரு நாள் வாடகை 3 ரூபாய். மிகவும் எளிமையான மனிதராக கழகத் தொண்டர்களிடம் பழகக்கூடியவர்.
அவர் சேலத்தில் தங்கியிருக்கும்போது, தொண்டர்கள் யாரேனும் தங்க இடமின்றி தவித்தால், அவர்களையும் தன்னுடைய அறையிலேயே தங்க வைத்துக்கொள்வார். அந்தளவுக்கு பாரபட்சமின்றி தொண்டர்களிடம் நட்பு பாராட்டுவார். அவருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் யாரும் நேரடி அரசியலுக்கு வரவில்லை. அவருடைய மறைவு, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கழகத்திற்கு பேரிழப்பு,'' என்கிறார்கள் திமுக முன்னோடிகள்.