இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. தினமும் 20 ஆயிரத்தைக் கடந்து தொற்று பதிவாகி வருகிறது. பலி எண்ணிக்கையும் தற்போது மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "கரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். கரோனா தடுப்பு விதிமுறைகளை மிகக் கடுமையாகப் பின்பற்றுவோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலித் தொடரை உடைக்காமல் கரோனாவை ஒழிக்க முடியாது. எனவே, அரசின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.