நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து அரசியலில் களம் இறங்கி பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை மையக்கருத்தாக வைத்து படம் எடுத்து தன்னுடைய அரசியல் ஆசையை தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டே வருகிறார். கூடவே தன்னுடைய ரசிகர்களை வைத்து அரசியல் நிலைபாட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போஸ்டர்களும், மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமிப்பதையும் செய்து கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய், தனது 44வது பிறந்தநாளை வரும் 22ஆம் தேதி கொண்டாடுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இருப்பினும், அவரின் ரசிகர்கள் நாளைய முதல்வரே என தமிழக சட்டமன்றப் படத்துடன் நெல்லையிலும், திருச்சியில் நெக்ஸ்ட் சி.எம் என போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் திருச்சியில் தொண்டர் அணி, விஜய் மக்கள் இயக்கம்
சார்பில் திருச்சி, ஜங்ஷன், சத்திரம் பகுதிகளில் ஓட்டிய போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தேர்தல் அறிக்கையல்ல, தமிழகத்திற்கு தேவையான அறிக்கை என்பது போன்று அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வில் விலக்கு அளிக்க போராட்டம் நடத்தப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும், பெட்ரோல் டீசல்களுக்கான மாநில வரியை ரத்து செய்யப்படும், அத்தியாவச தேவைகளுக்கான பொருட்கள் விலைகுறைக்கப்படும், விவசாய கடன் ரத்து செய்யப்படும், விவசாயி கடன் தள்ளுபடி செய்யப்படும், கிரானைட், கல்குவாரிகள், எல்லாம் முழுமையாக அரசு உடமையாக்கப்படும் போர்கால அடிப்படையில் கிராமபுற, நகர்புற சாலைகள் எல்லாம் நவீனமயமாக்கப்படும் என்று அறிக்கை வடிவில் எழுதியிருக்கிறார்கள்.
இதே போன்று விஜய் தலைமை மன்றத்தின் சார்பில் இரத்ததான முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக கே.என்.நேரு கலந்து கொண்டு துவக்கி வைத்தது இன்னும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கடந்த காலங்களில் தி.மு.க.வை ஆதரித்ததும். பிறகு அ.தி.மு.க.வை ஆதரித்ததும் தற்போது எந்த நிலைபாடும் இல்லாத நிலையில் தடீரென தி.மு.க. மாவட்டசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டது என்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.