மாவோயிஸ்ட்கள், நக்ஸலைட்டுகளை கண்டறிய க்யூ பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று போலீசார் வெளியிட்ட தகவலில் "கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் கோவை ஆனைக்கட்டி என்ற இடத்தில் பதுங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்பவரை கைது செய்தனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை விசாரணைக்காக ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையத்திலுள்ள க்யூ பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு ஸ்ரீமதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.
உண்மையில் நடந்தது இதுவல்ல என கூறும் மனித உரிமை அமைப்பினர், "சில மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் அட்டப்பாடியில் துப்பாக்கி சூடு நடத்தி 2 மாவோயிஸ்டுகளை கொன்றது போலீஸ். அப்போது சிலர் தப்பியதாகவும் கூறப்பட்டது. அதில் தீபக் என்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு ஆண் மற்றும் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி ஆகிய 2 பேரும் தப்பித்து விட்டதாகவும் போலீஸ் ரெக்கார்டிங் கூறப்பட்டது.
அப்படி தப்பித்ததாக சொல்லப்படும் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி தான் தற்போது கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்கள். இவர் கோவை மாவட்டம் ஆனைகட்டியில் பதுங்கி இருந்தபோது கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீமதி உட்பட இன்னொரு ஆண் மாவோயிஸ்ட் கேரளா மாநிலத்தில் இருந்து ஆனைகட்டி வரும் பேருந்தில் வந்ததாகவும் அந்தப் பேருந்தை நிறுத்தி இரண்டு பேரை போலீசார் பேருந்திலிருந்து இறங்கியதும் அதில் ஒருவர் தான் ஸ்ரீமதி என்றும் மற்றொருவர் யார் அவரின் விவரம் என்ன என்பது தெரியாமல் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது அவரின் கதி என்ன என்பது அச்சமாக இருக்கிறது" என தெரிவிக்கின்றனர்.
பெண் மவோயிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் தற்போது ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இப்போது கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை தமிழக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புறப்படும்போது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி தரவேண்டும் என மனித உரிமை வழக்கறிஞர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.