Skip to main content

அமைச்சர் உதயகுமார் ஒரு பச்சோந்தி! ஸ்டாலினை பற்றி பேச அருகதை கிடையாது!! -ஐ.பெரியசாமி கண்டனம் 

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

அண்மையில் அமைச்சர் உதயக்குமார், ''எது செய்தாலும் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள் அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான். எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் அடுத்தடுத்து போராடுகிறது எதிர்கட்சியான திமுக. பொதுநலத்தை மறந்து சுயநலமாக செயல்படுவதால் மக்கள் ஸ்டாலினுக்கு தோல்வியை தருவார்கள்'' என விமர்சித்திருந்தார்.அதேபோல் அறிக்கையும் விட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் இந்த விமர்சனம் குறித்து திமுக துணை கழக பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 

dmk i.periyasamy condemned


தமிழகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்த சான்றிதழை விமர்சனம் செய்த எங்கள் கழகத் தலைவர் மீது “ஆத்திரத்தில் வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறார்” என அரை வேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டுள்ள அமைச்சர்  உதயகுமாருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தரத்திற்கு” ஏற்ற “பதவியை” பெற்றிருந்தால் இப்படியெல்லாம் தரங்கெட்ட அறிக்கை விட மாட்டார். தகுதிக்கு மேற்பட்ட பதவியை “விபத்தாக” பெற்ற காரணத்தால் அமைச்சர், தி.மு.க.வின் வரலாறு தெரியாமலும், எங்கள் கழகத் தலைவரின் பெருமைகள் தெரியாமலும் உளறிக் கொட்டுவது “ஊழல் ஆணவத்தின்” உச்சக்கட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த உதயகுமார் எப்படிப்பட்ட யோக்கியர்? ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தவரை “காலணி அணியாமல்” ஒரு வேடம் போட்டார். அவர் மறைந்ததும் “தியாகத்தின் திருவுருமே வருக… அரசுக்கு தலைமையேற்க வருக” என்று திருமதி சசிகலாவிற்காக தனி வேடம் போட்டார்.

“விசுவாசத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து கற்றுக்கொண்டோம்” என்று கூறி - “கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்” என்று கூறி பிறகு திருமதி சசிகலா காலையும் வாரி விட்ட யோக்கிய சிகாமணிக்கு ஸ்டாலினை பற்றியெல்லாம் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

“எடப்பாடியாரும், பன்னீரும் மருது சகோதரர்கள்” என்று மருது சகோதரர்களின் புகழ் பெற்ற வரலாறே தெரியாமல் திடீரென்று சுயநலனுக்காக பாராட்டுவார். பிறகு “முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பண்பாளர். பணிவாளர்” என்று காதைப் பிளக்கும் ஜால்ரா அடிப்பார். பச்சோந்தியை விட படு வேகமாக நிறம் மாறும் அமைச்சர்  உதயகுமாருக்கு அரசியல் ஒரு கேடா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. புதுப்புது வேடம் போடுவதில் கில்லாடியாக இருக்கும் உதயகுமார் மேடைக்கு வேண்டுமானால் நடிக்கலாம். அது அரசியலுக்கு அசிங்கமாகக்கூட அல்ல மகா கேவலமாக இருக்கும் என்பதை ஏனோ பதவி மயக்கத்தில் மறந்து விட்டு தடுமாறி நிற்கிறார்.


மறைந்த எங்கள் கழகத் தலைவர் கலைஞர் பற்றியெல்லாம் கருத்துக் கூற “துரும்பு” அளவிலான தகுதி கூட உதயகுமாருக்கு இல்லை ஆளுக்கு ஏற்றவாறு அடித்த ஜால்ராவால் அமைச்சர் பதவி பெற்றால் மட்டும் அந்தத் தகுதி வந்து விடுமா? அல்லது ஊழல்…ஊழல் என்று வருவாய்த் துறையில் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதால் வந்து விடுமா? இயற்கை பேரிடருக்கு கொடுத்த நிதியை எல்லாம் உதயகுமார் எப்படிச் சுருட்டியிருக்கிறரார்.
 

மறுசீரமைப்புப் பணிகளில் நடைபெற்றுள்ள ஊழல் என்ன? மக்களுக்கு தெரியாதா? அதிமுக ஆட்சியில் ஸ்திரத்தன்மையுடன் இருப்பது ஊழலே - அதுவும் உதயகுமார் போன்றோரின் ஊழல் மட்டுமே. அதிமுக ஆட்சியின் மீது மக்கள் இன்று வெறுப்பில் இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் வரும் போது  உதயகுமார் உள்ளிட்ட எந்த அதிமுக அமைச்சரும் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குக் கூட கேட்க தெருவில் நடக்க முடியாது அந்த அளவிற்கு மக்கள் கோபத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்,  சசிகலா ஆகியோரிடம் மண்டியிட்ட  உதயகுமார் இப்போது எடப்பாடி பழனிசாமியிடம் அதை விடக் குனிந்து மண்டியிட்டுப் பிழைப்பதை நான் குறை கூறவில்லை. அது அவருக்கு சுயநல அரசியல் அல்லது உள்கட்சி அரசியல் ஆனால் எங்கள் கழகத் தலைவர் மீது கடும் சொற்களைப் பயன்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

‘ஈழத்தமிழர்கள், சிறுபான்மையின மக்கள் நலனுக்கு எதிரானது அதிமுக அவர்களுக்கு துரோகம் செய்யும் கட்சி அதிமுக தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான கட்சி அதிமுக’ என்றெல்லாம் முத்திரை பதிக்கப்பட்டு விட்டது.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு உள்ளிட்ட அத்தனையையும் ஆதரிக்கும் அதிமுகவிற்கு பா.ஜ.க. அரசு அளித்துள்ள “பரிசுதான்” இந்த பாராட்டுப் பத்திரம்.

எங்கள் கழகத் தலைவர் அளித்துள்ள அறிக்கை யினால் தமிழக மக்களிடம் சில தினங்களாக பேட்டி முழுப்பக்க பத்திரிகை விளம்பரம் போன்றவற்றால் போட்ட “நல்லாட்சி வேடம் கலைந்து விட்டது” என்ற எரிச்சலில் அமைச்சர்  உதயகுமார் அலறுகிறார் அறிக்கை விடுகிறார் ஆனால் நாவடக்கம் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் என்பதால் எதை வேண்டுமானாலும் அறிக்கையாக விடலாம் எங்கள் கழகத் தலைவரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று நினைத்தால் உதயகுமார்தான் எதிர்காலத்தில் அரசியல் அனாதையாக வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துஅவர் செய்த ஊழல்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையா? அல்லது மதுரை மத்திய சிறைச்சாலையா என்பதை இப்போதே  உதயகுமார் முடிவு செய்து கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில்  அதிரடியாக   கூறி இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்