தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன் படி வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவைத்தாக்கல் செய்ய ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள் என்றும், ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிக்காலம் நிறைவடைய உள்ள உறுப்பினர்களின் விவரங்களை பார்க்கலாம்.
1. மைத்ரேயன் ( அதிமுக ).
2. லட்சுமணன் (அதிமுக).
3. ரத்தினவேல் ( அதிமுக ).
4. டி. ராஜா ( இடதுசாரி ).
5. அர்ஜூனன் ( அதிமுக ).
6. கனிமொழி ( திமுக ).
இதில் நான்கு உறுப்பினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள். முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இடதுசாரி கட்சிகளின் ஒருவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்குவது வழக்கம். அதன் படி இடதுசாரி கட்சியின் டி.ராஜாவிற்கு வழங்கியிருந்தார். இவருடன் சேர்த்தால் அதிமுகவில் ஐந்து உறுப்பினர்கள் ஆகும். அதே போல் திமுக சார்பில் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு முதன் முறையாக சென்றார் கனிமொழி.
ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அதிமுகவிடம் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்தது திமுக. தற்போதைய நிலையில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் திமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும், அதிமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மொத்தம் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆகும். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும். இந்த இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.