திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக மாவட்ட தி.மு.க சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க சார்பில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பங்கேற்று பேசும்போது, "தமிழகத்தில் திராவிட இயக்கம் என்றால் அது தி.மு.க ஒன்று மட்டும்தான். தற்போது தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடியின் எடுபுடி ஆட்சியை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்கள். இழந்த உரிமைகளை மீட்டெடுத்து நல்லாட்சி அமைய, ஸ்டாலின் தலைமையில் திமுகதான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை அலை தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு, ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதற்கு சூளுரை ஏற்போம்" என்றார்.
மேலும் அவர், "தேர்தல் ஆணையத்திடம் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு முழு அதிகாரம் கேட்டு பெற்றுத் தந்துள்ளோம். அதனால், தி.மு.க பூத் ஏஜென்ட்கள் நாங்கள் கொடுத்துள்ள அடையாள அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, களப்பணியாளர்கள் போல் தேர்தல் அதிகாரிகளிடம், நேரடியாகச் சென்று, கேள்வியாய்க் கேளுங்கள். வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட குறைபாடுகளைச் சரிசெய்து தரும்வரை அவர்களைத் தூங்கவிடாதீர்கள். நமக்குச் சாதகமான அனைத்து வாக்காளர்களையும், இந்த நான்கு நாள் முகாமில் சேர்ப்பது, உங்கள் கடமையாக இருக்க வேண்டும்" என்று வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வத்தலகுண்டு ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.