Skip to main content

காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த சிறுமி கர்ப்பமான விவகாரம்; குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

 

om


சேலத்தில் தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பம் அடைந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் இன்று (செப்டம்பர் 11, 2018) நேரில் விசாரணை நடத்தினார். 


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டி வட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஏழைத்தாய் சரோஜா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருடைய 16 வயது மகள், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சரோஜா, மகளை பராமரித்து வந்தார்.


அடிக்கடி வீட்டில் இருந்து காணால் போவதும், சாலையில் எங்காவது சுற்றித்திரியும் மகளை காவல்துறையினர், உறவினர்கள் மீட்டு வந்து வீட்டில் ஒப்படைப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. மகளின் சிகிச்சை செலவுகளுக்காக சரோஜா, பலரிடம் ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தார். கடனை அடைப்பதற்காக அவர் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையில் உறவினர் வீட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலைக்கு மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றார்.


இதையடுத்து மகளையும் சென்னைக்கு அ-ழைத்துச்செல்ல முடியாது என்பதால், சேலம் ராம் நகரில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றார். அவ்வப்போது போன் மூலம் மகளிடம் பேசி வந்தார்.

 

o


இந்நிலையில், மனநலம் பாதித்த சிறுமிக்கு மாதவிலக்கு சரியாக போகவில்லை என்றதோடு, அவருக்கு வயிறும் சற்று பெரிதாக காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த காப்பக நிர்வாகிகள் இதுகுறித்து சரோஜாவுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். கடந்த 31.8.2018ம் தேதி நேரில் வந்த சரோஜா, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தார்.


அப்போது மனநலம் பாதித்த சிறுமி நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதுகுறித்து காப்பக ஊழியர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். மேற்கொண்டு மகளை அந்த காப்பகத்தில் தங்க வைக்க மனமில்லாத சரோஜா, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 7.9.2018ம் தேதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.


தமிழ்நாடு மகளிர் அமைப்பு சார்பில் இரு நாள்களுக்கு முன்பு லைப்லைன் டிரஸ்ட் காப்பகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதற்கிடையே மனநலம் பாதித்த சிறுமி மர்ம நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும், அதனால் அவர் கர்ப்பம் அடைந்தது குறித்தும் தகவல் அறிந்த தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் இன்று சேலத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். சிறுமியின் தாயாரிடமும் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இப்போதுள்ள சூழலில் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதால், சிகிச்சை முடிந்த பிறகு தொடர் விசாரணை நடத்தப்படும். காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் வன்முறை நடந்திருந்தால், காப்பக நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தை பொறுத்தவரை சிறுமிகளுக்கு குறிப்பாக மனநலம் பாதித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் சிறுமிகளுக்கு போதைல் பொருள்களை கொடுத்த பிறகுதான் நடக்கின்றன. இந்த சிறுமிக்கும் மதுபானத்தைக் கொடுத்துதான் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 


இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் விசாரணை அறிக்கை ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்