திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளபட்டி கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீமது இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில். பழம் பெருமை வாய்ந்த இக்கோவிலின் பெரிய கும்பிடு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன்பின்னர் முகூர்த்தகால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மாலை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய விரதம் இருந்து காப்புக்கட்டிக்கொண்ட பக்தர்கள் பாரதிநகர் பிள்ளையார் கோவிலிலிருந்து பால்குடங்களை சுமந்தவாறு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதன்பின்னர் செவ்வாய்கிழமை அம்மன் கரகம் எடுக்க விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு வந்தனர். அப்போது ஜமீன்தார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜமீன்தார் முத்துராஜாவை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மாலை அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலுக்கு வந்த ஜமீன்தார் அசுவ வாகனத்தை (குதிரை) தானமாக கொடுக்க ஜமீன்தாருடன் கோவில் கமிட்டியார்கள், பக்தர்கள் அம்மனை அழைத்து வர பிருந்தாவன தோப்பிற்கு சென்றனர். அங்கு அம்மன் கரகம் மல்லிகைப்பூ வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அம்மன் கரகம் முன்பு பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மியடித்தனர். அதனை தொடர்ந்து அம்மன் கரகம் முன்பு கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜாதி மான் முதலில் கத்திபோட அதன்பின்னர் செவ்வலேர் வம்சத்தை சேர்ந்த தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கத்தி போட்ட பின்பு தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்கள் மார்பில் கத்தி போட்டவாறு சௌடம்மா தீசிக்கோ! சௌடம்மா தீசிக்கோ!! சௌடம்மா தீசிக்கோ!!! என சொல்லி இரத்தம் சொட்ட சொட்ட தங்கள் மார்பு மீது கத்தி போட்டவாறு அம்மனை அழைத்தனர். அதனை தொடர்ந்து ஜமுதாவி அம்மனை போல் அலங்கரித்த கரகத்தை குதிரை மீது வைத்து அம்மன் கரகத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மன் கரகம் பிருந்தாவன தோப்பில் இருந்து புறப்பட்டு கஸ்தூரிபா மருத்துவமனை சாலை, பூஞ்சோலை, தேவாங்கர் பள்ளி சாலை, பொம்மையசாமி கோவில் தெரு, கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அசுவ வாகனத்தில் அமர்ந்தவாறு அம்மன் கோவிலுக்கு வந்தபோது ஓம்சக்தி, பராசக்தி, என்று பக்தர்கள் கோஷமிட்டனர். அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவிலில் சக்திசேர்க்கும் போது தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் மார்பில் கத்தி போட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கோட்டை தேவாங்கர் மகாஜனசபை நாட்டாமை வழக்கறிஞர் பி.வாசுதேவன், பெத்தனகாரர் எஸ்.முருகன், தலைவர் ஏ.இராமலிங்கம், செயலாளர் எம்.முருகன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், துணைச்செயலாளர்கள் புவனேந்திரன், இணைபொருளாளர் வி.பெருமாள், இணைச்செயலாளர் கே.கனகராஜ், தேவாங்கர் இளைஞர் அணியை சேர்ந்த தலைவர் சி.தேவா, வி.வீரேஸ்குமார், எஸ்.கோபிநாத், இணைத்தலைவர் தினேஷ் குமார், இணைச்செயலாளர் விமல்குமார், மற்றும் சவடம்மன் கோவில் பூசாரி ஏ.எஸ்.கனேசன் சாஸ்திரி, துர்கைஅம்மன் கோவில் பூசாரி கே.எம்.முருகன், கரகம் எடுக்கும் பூசாரி கார்த்திக், அஸ்வவாகனத்தில் ஜமுதாடு பெட்டி அழைத்து வரும் ஜாதிப்பிளை எஸ்.சரவணன் தலைமையிலான விழா கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயமஹாலில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்!