அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெயர் இடம் பெற்றது. அதேபோல் முதல் ஆளாக, தனது போடி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதேவேளையில் இதில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளது.
தேனி - போடி சாலையில் உள்ள சாலை காளியம்மன் கோவிலில் ஓ.பி.எஸ். சாமி தரிசனம் செய்தார். அதன்பின் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் ஊர்வலமாக சென்று, தேவாரம் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான விஜயாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், தேர்தல் விதி முறையின்படி வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய வரவேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.
ஓ.பி.எஸ். வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் விதிமுறைகளை மீறி 20க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் ஓ.பி.எஸ். உடன் இருந்தனர். ஓ.பி.எஸ். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார் என்று தெரிந்து, போடியில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில் இரவோடு இரவாக ரோடு சீரமைப்புப் பணியும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்திருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேட்பு மனு தாக்கலின் போது தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.