நேற்று மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதியில் அமைந்துள்ள அம்மா திடலில் பாஜக சார்பில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியபோது,
''மதுரையில் மீனாட்சியம்மனின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது. மீனாட்சியம்மனின் ஆசிர்வாதம் பாஜகவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மோடி செல்லும் இடங்களிலெல்லாம் தமிழ்மொழியின் பெருமை குறித்தும், திருக்குறளையும் பேசிவருகிறார். திருக்குறள் ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு 14 வது நிதி கமிசன் மூலம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 48 கோடி வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசு தமிழகத்தின் நெசவுத்தொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. தமிழகத்தில் மோடி ஆட்சியில் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. மோடி ஆட்சியின் திட்டங்கள் ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் திட்டங்கள்.
தமிழகத்தில் 56 லட்சம் கழிப்பறைகள், 95 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தில் 30 லட்சம் மகளிர் பயன் அடைந்துள்ளனர். தமிழக மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளது மோடி அரசு. தமிழகத்தில் 35 லட்சம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் நிதி வழங்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோடி தான் மதுரைக்கு எய்ம்ஸ் கொடுத்தார். எய்ம்ஸ் மூலமாக ஆண்டுதோறும் 100 மருத்துவர்கள் உருவாகுவார்கள்.
திமுக தமிழர்விரோத ,தேசவிரோத போக்கை கையாண்டுவருகிறது. பாஜகவினர் கையில் வேலை எடுத்து தமிழக கலாச்சாரத்தை காத்துள்ளோம். கலாச்சார பண்பாட்டிற்கு எதிரானவர்களாக இருந்த திமுகவினர் தற்போது கையில் வேல் ஏந்தும் நிலை உருவாகியுள்ளது. மாநிலங்களுக்கான தேவைகளை தேசியத்தோடு இணைந்துபெற வேண்டும் என எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செயல்பட்டார்கள்.
வரும் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவுடன் கூட்டணி உறுதி. பாஜகவும் அதிமுகவும் தேச வளர்ச்சி போன்று தமிழக வளர்ச்சியிலும் சேர்ந்து பயணிப்போம். தமிழக கலாச்சாரத்தை பாஜக மட்டுமே பாதுகாக்கும். தமிழகத்தை தேசிய நீரோடையில் இணைக்க பாஜகவிற்கு ஆதரவளிக்க வேண்டும். இந்த கூட்டம் வாக்குகளாக மாற பாஜகவினர் பாடுபட வேண்டும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் தாமரை உங்களை முன்னேற்றும்'' என்றார்.