செங்கல்பட்டில் அதிமுகவின் 100 அடி உயரக் கொடிக் கம்பம் கழட்டி மாற்றப்பட்டபோது கம்பம் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டில் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை அருகே அதிமுகவின் 100 அடி உயரம் கொண்ட ராட்சத கொடிக் கம்பம் இருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்தக் கம்பம் நடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றிவிட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில் அக்கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள வளையம் பழுதடைந்ததால் அதில் பறந்துகொண்டிருந்த அதிமுக கொடி கிழிந்திருந்தது. இதனால் கம்பத்தைக் கீழே இறக்கி சரி செய்து மீண்டும் கொடிக் கம்பத்தை இணைக்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் செல்லப்பன் (28) என்பவர் மீது கொடிக்கம்பம் விழுந்தது. உடனடியாக செல்லப்பன் மீட்கப்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே செல்லப்பன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சிக் கொடிக் கம்பம் விழுந்து தொண்டர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.